1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. ஐந்து பாகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், தமிழகத்தில் தஞ்சாவூர், பழையாறை, காஞ்சிபுரத்தில் தொடங்கி கோடியக்கரை வரை நீண்டு இலங்கைக்கும் செல்லும் கதைக்களம், போர்க்களக் காட்சிகள் என்று அதன் பிரமாண்டம் மிகப்பெரியது.
இப்பிரமாண்டமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்திருக்கிறது. இந்நிலையில் மணிரத்னம் இதனைத் தற்போது படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளைப் படக்குழு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, “‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு 10 நாள்கள்தான் தமிழகத்தில் நடைபெற்றது. மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு எல்லாம் ராஜமுந்திரி (ஆந்திரா) மற்றும் ஹைதராபாத்தில்தான் நடைபெற்றது. எனவே ‘பொன்னியின் செல்வன்’ உங்கள் படம். இதை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என அந்நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர்களின் முன்னிலையில் பேசியிருக்கிறார்.
“இந்த படம் உங்களுடைய படம். தமிழ்நாட்டைவிட அதிகமாக இங்கேதான் எடுக்கப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டி அவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பலரும் அந்த வீடியோவை ட்வீட்டரில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
“சோழர்களின் வரலாற்றைச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’, ஆந்திராவில் படமாக்கப்பட்டதால் அது தெலுங்குப் படமாகுமா? படத்தின் விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? தமிழகத்தில் அவரின் வீடியோவை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று நினைத்துவிட்டாரா?” என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.