வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். அவர் 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை. மீண்டும் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாத புகாரின் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
வேலூரில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், தனது சிறை அறையில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது முறைகேடாக நடந்துக் கொண்டதாக புகார் எழுந்தது. கடந்த 2020 ம் ஆண்டு காவலர்கள் சோதனை செய்த போது, தனது உடையை கழற்றி நிர்வாணமாக நின்று, பெண் சிறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல், சிறை அதிகாரியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் முருகன் என்று சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில். பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் முருகன் வேலூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் 2 வது முறையாக ஆஜர் படுத்தப்பட்டார்.
முருகன் தொடர்பான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் முருகனை வரும் 29-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டதையடுத்து பாலத்த பாதுகாப்புடன் முருகன் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவ்வழக்கை விரைந்து முடிக்க கோரி, கடந்த 19 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் முருகன்.
முருகன் பரோலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இவ்வழக்கை காரணம் காட்டி மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்தது என்பதும், அதனால்தான் முருகன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கான தீர்மானம் 2014ஆம் ஆண்டு, பிப்.19ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது.
நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அடுத்து, விடுதலை கோரிய பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். தற்போது, நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தற்போது பரோலில் இருக்கின்றனர்.