நடப்பாண்டுக்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் செல்வதால், அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. http://www.aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றார்.
அரசுப்பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது என சுட்டிக்காட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் அப்படி அல்ல. அது தனியார் ஒப்பந்த வாகனங்களாக இந்தியா முழுமைக்குமான கட்டண விகிதத்துடன் இயங்குவது. அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி வகை பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. இந்தியா முழுமைக்கும் இதுதான் நிலை என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களுக்கான சேவையை தமிழக அரசு வழங்கி கொண்டிருக்கிறது. கூடுதல் சேவையை எதிர்பார்ப்பவர்கள்தான் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர். ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த பேருந்துகள் என்பதால் கட்டண வரம்பு இல்லை. ஆனாலும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர். நான் மக்கள் தரப்பிலிருந்து தான் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன். தமிழக அரசு சார்பில் 21ஆயிரம் பேருந்துகள் மக்களுக்காக இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்தில் அதன் கட்டண தெரிந்தும், அதில் பயணிப்பவர்கள் அதிகம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதி, இரவு நேர பேருந்து வசதி உள்ளது. பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது. கூடுதல் கட்டணம் தொடர்பாக 957 தனியார் பேருந்துகளை தணிக்கை செய்ததில் புகார் செய்தவர்கள் 97 பேர்தான். மீதமுள்ளவர்கள் கட்டணம் எவ்வளவு என தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு கிடையாது என்று அமைச்சர் கூறுவதன் மூலம், ஏழைகளுக்கு அரசு பேருந்து, பணமுள்ளவர்களுக்கு தனியார் பேருந்து என அரசே சொல்கிறதா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், அரசுப் பேருந்தில் சேவை சரியில்லை என்பதால்தான் பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். அரசு பேருந்துகளில் பெரும்பாலும் பொதுமக்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இந்த சூழலில், ஆம்னி பேருந்துகளின் கிடைக்கும் சேவையை அரசே அளிக்கும்பட்சத்தில், பொதுமக்கள் ஏன் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பயணிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளே நிரம்பி வழியும் நிலையில், ஊர்களுக்கு செல்ல போதுமான பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளைத்தான் நாட வேண்டியுள்ளது. அதிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு போன்று சேவை மனப்பான்மையோடு குறைந்த கட்டணம் வசூலிக்கவில்லை என்றாலும் நியாயமான கட்டணத்தையாவது வசூலிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அமைச்சர் சொல்ல வருவதுபோல ஆம்னி பேருந்தில் செல்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் கிடையாது. ஊர்களுக்கு செல்லும் சாமானிய மக்கள் கடனை வாங்கியாவது டிக்கெட் எடுத்துத்தான் ஆம்னி பேருந்துகளில் செல்கின்றனர் என்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், “ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. அத்துடன், பேருந்துகள் வாங்கவும், அதன் பராமரிப்புக்கும் ஆகும் செலவு அதிகம். எனவே, ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. இந்தியா போன்ற நாடுகளில் போக்குவரத்துத் துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம், ரயில், பேருந்து ஆகியவற்றில் டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ள பொழுது குறைந்த அளவு கட்டணமும், தேவைகள் அதிகமாக உள்ள பொழுது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளே பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணிக்கிறார்கள். அதனால் பயணிகள் விருப்பம் இல்லாமல் பயணிப்பதில்லை. அதனால் எந்தப் பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை.” என்கின்றனர்.