*பொதுமக்கள், வாகனஓட்டிகள் வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் நடந்து வரும் சிறு பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் சிறுபாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு இடங்களில் பால பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளம் தோண்டி வைத்துள்ள பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்கள் இரவு நேரத்தில் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை உள்ளது.
மேலும் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. தினந்தோறும் இந்த சாலையின் வழியே பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவைகள் அதிகளவு சென்று வருகின்றன. சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் சாக்காங்குடி, கிளியனூர், ஒரத்தூர், பரதூர், சாத்தமங்கலம், பூதங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேலும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
ஏற்கனவே குறுகலான சாலை என்பதால் வாகன விபத்துகள் அதிகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. தற்போது சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சிறுபாலம் கட்ட பள்ளம் தோண்டப் பட்டுள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலை சேறும், சகதியுமாக ஆகிவிடுகிறது.
எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கையாக சிதம்பரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் விரைந்து நெடுஞ்சாலையில் சிறு பாலப்பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.