டெல்லியில், விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் கட்சி பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
டெல்லியில் மெஹ்ருலி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்ஜீத் யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு ஹர்ஜீத் யாதவ் மது போதையில் வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் என்னவென விசாரித்து கொண்டிருந்தார் அந்த விமான பணிப்பெண். மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருந்த ஹர்ஜீத் யாதவ், திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்தார்.
அந்த பெண், “இதெல்லாம் தவறு, என்னிடம் இது போல் நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை. நான் சாதாரணமாக பழகியதற்கு இப்படி ஒரு மோசமான செயலை என்னிடம் செய்யாதே” என வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ஹர்ஜீத் யாதவோ, அதையெல்லாம் காதில் வாங்காமல் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் அச்சம் அடைந்த அந்த பெண், போதையில் இருந்த ஹர்ஜீத் யாதவை ஒரு அறையில் வைத்து பூட்டினார். இதையடுத்து போலீசாருக்கு அந்த இளம்பெண் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போதும் ஹர்ஜித் யாதவுக்கு போதை தெளியாமல் இருந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் பிரமுகர் ஹர்ஜீத் யாதவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.