கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது? என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், “கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், “ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்கவும்” என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (செப்டம்பர் 28) தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM