8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் 2-ம் கட்ட சோதனை

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் மெகா சோதனை நடத்தப்பட்ட நிலையில், 8 மாநிலங்களில் அந்த அமைப்பினரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சோதனையானது மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது.

கடந்த வாரத்தில் நடந்த சோதனையின் போது கிடைத்த ஆதாரங்கள், கைது செய்யப்பட்டவரிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் இன்றைய சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில், சமராஜாநகர், பாகல்கோட், பிடார், விஜயபுரா, சித்ரதுர்கா, மங்களூரு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. பாகல்கோட் மாவட்டத்தில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் 7 பேரும், பிடார் மாவட்டத்தில் கரீம் என்வரும் கைது செய்யப்பட்டனர். விஜயபுரா மாவட்டத்தில் சோதனைக்கு எதிராக பதற்றத்தைத் தூண்டும் விதமாக செயல்பட்டதால் அம்மாவட்ட பிஎஃப்ஐ தலைவர் அஷ்ஃபக் ஜமஹண்டி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடகா முழுவதும் 75-க்கும் அதிமான பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ தலைவர்கள், நிர்வாகிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

பிஎஃப்ஐ உடன் தொடர்புடைய அஸ்ஸாம் மாநிலத்தின் நாகர்பேரா பகுதியைச் சேர்ந்த 4 பேரும், தர்ரங் மாவட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் உள்பட 8 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிராவில், மாலேகான், அவுரங்காபாத், நந்தேட், சோலாபூர், ஜால்னா, பர்பானி ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. தேசிய புலனாய்வு முகமை, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை, உள்ளூர் போலீஸ் ஆகியோர் 25 இடங்களில் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத்தில் ஏற்கனவே 14 பிஎஃப்ஐ நிர்வாகிகளை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர், உள்ளூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மும்பார பகுதியில் இருபிரிவினருக்கிடைய வன்முறையை தூண்டியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிஎஃஐ நிர்வாகிகள் 4 பேரை தானே குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்யதனர்.

இதேபோல டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிஎஃப்ஐ நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில், மோடிநகர் கலிசான் கிராமத்தில் பிஎஃப்ஐ உடன் தொர்புடைய 5 பேரை அம்மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 22ம் தேதி, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் பிஎஃப்ஐ அமைப்பிற்கு எதிராக மெகா சோதனை நடத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், பிஹார், மணிப்பூர் ஆகிய 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 100க்கும் அதிகமான பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.