கர்நாடகா: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் அலுவலகங்கள், நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகளில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என கடந்த வியாழக்கிழமை சுமார் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களை தீவிரமாக கண்காணித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் இன்று 8 மாநிலங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக மெகா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, கோலார், பாகல்கோச், கல்புர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையை ஒட்டி முன்னெச்சரிக்கையாக பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அசாமிலும் சோதனை நடந்து வரும் நிலையில், கோல்பாரா, துப்ரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.