அடாவடி மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை

சென்னை: சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய  மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை விடுவித்தது.  சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அடாவடி செய்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாணவன் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது, மாணவனின் தந்தையை நேரில் வரவழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணியாற்றி, சிரமத்துடன் மகனை படிக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். 

தந்தையின் நிலைமையையும், குடும்பத்தின் நிலைமையையும் அறிந்துக் கொண்ட நீதிபதி, அடாவடி செய்த மாணவன் குட்டி, ஆறு வாரங்களுக்கு  சனிக்கிழமை தோறும்  சென்னையில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்கு சேவை செய்ய வேண்டும் என்று தெரிவித்தர்.

மறுவாழ்வு மையத்தில் உள்ள ஊழியர்களுக்கு, பராமரிப்புப் பணியில் உதவ வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மாணவர் அங்கு சேவை செய்ததற்கான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிப்பதாக மனுதாரரான மாணவர் குட்டியிடம் நீதிபதி தெரிவித்துள்ளார். மாணவனின் கல்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவரின் அடாவடி செயலுக்கு தண்டனை வழங்காமல், நிவாரணம் வழங்கியிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வாஸ்து டிப்ஸ், வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்க்கலாமா 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.