இந்தித் திரைத்துறையில் பிரபல காமெடியனாக வலம் வந்த ராஜு ஸ்ரீவஸ்தவ், தன்னுடைய 58 வயதில் செப்டம்பர் 21-ம் தேதி அன்று காலமானார். ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS Hospital) அனுமதித்திருந்தனர். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீவஸ்தவ்வை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் காலமானார்.
1980-ம் ஆண்டு, நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய ராஜு ஸ்ரீவஸ்தவ்வின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவ் உடல்நிலை சரியில்லாத போதும் அவரது மறைவின்போதும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவளித்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு, ராஜு ஸ்ரீவஸ்தவ்வின் மகள் அன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனுக்கும் தனது தந்தைக்கும் இருந்த நட்பு குறித்து மிகவும் உருக்கமாக சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாளும் எங்களுக்காக இருந்ததற்காக ஸ்ரீ அமிதாப் பச்சன் மாமாவுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கு ஏராளமான பலத்தையும் ஆதரவையும் அளித்தது, அதை நாங்கள் என்றென்றும் நினைவில் கொள்வோம்.
என் அம்மா ஷிகா, அண்ணன் என, என் முழு குடும்பமும் நானும் உங்களுக்கு என்றென்றும் நன்றி கூறுகிறோம். உலகளவில் அவர் பெறும் அன்பும் பாராட்டும் உங்களால்தான்” என்று பதிவிட்டிருந்தார்.
ராஜு மருத்துவமனையில் போராடிய காலத்தில் அவரது உடல்நிலை தேற விரும்பி தான் வாய்ஸ் நோட் அனுப்பியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஆடியோ கிளிப்பில் தன் குரலைக் கேட்டுக் கண்விழித்துப் பார்த்ததாகவும், அமிதாப் தன் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்ட அன்தாரா, “உங்கள் ஆடியோ கிளிப்பைக் கேட்டு எனது தந்தை கண் விழித்துப் பார்த்தது நீங்கள் அவருக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார். அவரின் இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.