அமராவதி:ஆந்திராவில், மத்திய மின் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவல் நேரங்களில் ‘மொபைல் போனில்’ பேச அக்டோபர் ௧ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.கவனச் சிதறல்இங்கு, மாநிலம் முழுதும் உள்ள மின் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வேலை நேரங்களில் மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து, ஆந்திர மின் பகிர்மான நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ஜே.பத்மா ரெட்டி விடுத்துள்ள உத்தரவு:ஊழியர்கள், மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால், கவனச் சிதறல் ஏற்பட்டு, வேலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஆந்திர மின் பகிர்மான அலுவலகங்களில் பணிபுரியும், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பதிவு உதவியாளர்கள், தட்டச்சர்கள், இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர்கள், அவுட்சோர்சிங் உதவியாளர்கள் உள்ளிட்டோர், வரும் ௧ம் தேதி முதல் அலுவல் நேரத்தில் மொபைல் போனில் பேச தடை விதிக்கப்படுகிறது.
விலக்குஇவர்கள் அனைவரும், அலுவலகத்துக்குள் வந்ததும் தங்களது போன்களை தனியாக ஒரு இடத்தில் வைக்க வேண்டும். உணவு மற்றும் தேநீர் இடைவேளையின் போது, தங்களது போனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரின் அவசர தொடர்புக்காக, தங்கள் உயரதிகாரியின் மொபைல் எண்ணை கொடுக்கலாம். இதை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திர அரசு நிறுவனங்களில் இங்கு தான் முதன்முறையாக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், உயரதிகாரிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement