மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகியின் வீட்டின் மீது கல்வீசிய மர்மநபர்கள், அவரது கார் கண்ணாடியையும் உடைத்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இந்து முன்னணி இளைஞர் அணியின் நகரப் பொறுப்பாளராக உள்ளார்.இவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து கிடந்தது. மர்மநபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசை திருப்ப முயற்சி: தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஹரீஷின் வீட்டுக்கு நேற்று வந்து விசாரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை பணம் கொடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி பிரச்சினையை திசை திருப்ப சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து உளவுத்துறை தீவிர கவனம் செலுத்தி கலவரம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்” என்றார்.