அவுரய்யா, உத்தர பிரதேசத்தில், பள்ளி ஆசிரியர் அடித்ததில் 15 வயது தலித் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, அவுரய்யா மாவட்டத்தின் பாபோண்ட் சாலையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நிகில் குமார், 15. இந்த பள்ளியில் வகுப்பு தேர்வுகள் சமீபத்தில் நடந்தன.
இதில் சமூக அறிவியல் தேர்வில், நிகில் குமார் பல தவறான விடைகளை எழுதியதாக கூறப்படுகிறது. இதற்காக, சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங், கடந்த 7ம் தேதி, வகுப்பறையில் வைத்து நிகில் குமாரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் நிகில் குமார் மயக்கமானார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் மரணம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாணவன் படித்த பள்ளி முன் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தினர்; கலெக்டரின் கார் சேதப்படுத்தப்பட்டது.தீவிர முயற்சிக்கு பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.’மாணவனின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், குற்றவாளி ஆசிரியர் தண்டிக்கப்பட வேண்டும்’ என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவான ஆசிரியர் அஸ்வினி சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement