சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல என்றும், ஏஆர் ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என அதுதொடர்பான வழக்கில், ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஜிஎஸ்டி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கூறி ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் ஜிஎஸ்டி ஆணையம் அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவரது மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், 6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை என கூறி, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ள ஒரு இசையமைப்பாளர், அந்த உரிமையை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளருக்கு வழங்கிவிட்டால், சேவை வரியில் விலக்கு அளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஜிஎஸ்டி ஆணையத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது
இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.