2022 செப்டம்பர் 24ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77ஆவது அமர்வின்போது இந்திய சுதந்திரத்தின் மகிமைமிகு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விசேட நிகழ்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது.
“இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்திய-ஐ.நா ஒத்துழைப்பு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் சேபா கொரோஷி, ஐ.நா சபையின் பிரதி செயலாளர் நாயகம் அமினா ஜே மொஹமட், மற்றும் ஆர்மேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா, சைப்ரஸ், காம்பியா, கயானா, ஜமைக்கா, மாலைதீவுகள், தன்சானியா, திமோர்-லெஸ்தே மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்நிகழ்வின்போது விசேட செய்திகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2. இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள், உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக இருந்து, சுதந்திரத்தின் பின்னரான 75 ஆண்டுகளில் ஐந்தாவது பாரிய பொருளாதாரமாக வளர்ச்சிகண்ட இந்தியாவின் ஸ்திரமான முன்னேற்றம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், இந்தியாவின் அபிவிருத்தியில் தொழில்நுட்பத்துறையின் வகிபாகத்தை சுட்டிக்காட்டிய வெளியுறவுத்துறை அமைச்சர், பொது டிஜிட்டல் உட்கட்டமைப்பின் காரணமாக 800 மில்லியன் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தமுடிந்ததாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வங்கித் துறைகளில் தொழில்நுட்பத்துறை காரணமாக ஏற்பட்டிருந்த முன்னேற்றமானது 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெறுபேறுகளைப் பெறுவதற்கும், இரண்டு பில்லியனுக்கும் அதிகளவான தடுப்பூசிகளை நிர்வகிப்பதற்கும் உறுதுணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
3. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் சொந்த அபிவிருத்தியினை ஏனைய உலகின் அபிவிருத்தியிலிருந்து பிரிக்க முடியாது என்பதனை, ஐக்கிய நாடுகள் சபையில் தனி ஒரு நாட்டினால் முன்னெடுக்கப்படும் தெற்கு-தெற்கு திட்டமான இந்தியா-ஐநா அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதிய செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி விவரித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலமாக 51 நாடுகளில் 66 நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆபிரிக்கா, கரீபியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அயல் உறவுகளுக்கு கொவிட்-19 பெருநோய் காலப்பகுதியில் இந்தியா தடுப்பூசிகளை வழங்கி முதலில் பதிலளித்து தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தது. தடுப்பூசிகளை வழங்குவதற்கான இந்தியாவின் உலகளாவிய நிகழ்ச்சித் திட்டமான நட்பு நாடுகளுக்கான தடுப்பூசித் திட்டத்தின் நேரடி பயனாளர்களே தாங்களென இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடுகளின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர்.
4. ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்தியாவின் ஒன்றிணைவு தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினரான இந்தியா, ஐ.நா.சபையுடனான 75 ஆண்டுகால நட்புறவு என்ற மைல்கல்லினை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் நாடாக 2.5 இலட்சத்துக்கும் அதிகமானோரை அமைதிகாக்கும் பணிக்காக அனுப்பியமை மூலமாக இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் இடையிலான பன்முகத்தன்மையினைக் கொண்ட இந்த ஒத்துழைப்பினைக் காணமுடிகின்றது. உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு குறித்தும் எடுத்துரைத்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர், தற்போது 100க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் சர்வதேச சூரியக் கூட்டமைப்பு கருத்திட்டமானது 2015ஆம் ஆண்டில் பிரான்சுடன் இணைந்து இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அனர்த்த இசைவாக்க கட்டமைப்புக்கான கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினராக இந்தியா உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும். அபிவிருத்தி என்பது பொது நன்மைக்கான ஒன்றென விவரித்த அவர், இப்பூமியின் சுபீட்சம் மிக்க எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுவாக்க இந்தியா திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
27 செப்டெம்பர் 2022