சென்னை: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளதால், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு விதமான நூதன போரட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 63வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில், கைக்குழந்தைகள், குடும்பத்தாருடன் பெண்கள், முதியவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடிகளையும், பதாகைகளையும் தங்களது கைகளில் ஏந்திக்கொண்டும் , “விவசாயம் வேண்டும், “விமான நிலையம் வேண்டாம்”,”அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே”…”காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம்”… “எங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம்” என பல்வேறு கோசங்களை எழுப்பி அக்கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை என்று வலியுறுத்தும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட முதியவர்கள்,பெண்கள் தங்களது ஊரினை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்றும்,எங்களுக்கு விமான நிலையாம் வேண்டாம் என கூறி கண்ணீர் மல்க தங்களது தலைகளில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.