மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச்சீட்டைக் கொண்டு போய் மருந்துக் கடைக்காரரிடம் கொடுக்கும்போது, அவர் “இந்த பிராண்ட் இல்லை. இதே மருந்தில் வேறு பிராண்ட் இருக்கிறது தரட்டுமா” என்று சில வேளைகளில் கேட்பார். இதனால் நாம் குழம்பிப் போவோம். ஒரே மருந்து என்றாலும் மருத்துவர் எழுதிக் கொடுத்ததைத்தானே உட்கொள்ள வேண்டும் என வேறு மருந்தகத்துக்குப் போய் அந்த பிராண்டைத் தேடிப்பிடித்து வாங்குவோம்.
ஒரே மருந்துதான் என்றாலும், ஒவ்வொரு பிராண்டும் தனித்தனி விலையில் விற்கப்படும். ஒரு பிராண்டில் 80 ரூபாய் என்றால் அதே மருந்து இன்னொரு பிராண்டில் 50 ரூபாயாக இருக்கும். இந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்து கொள்வது? 50 ரூபாய்க்கு விற்கும் மருந்தைவிட 80 ரூபாய்க்கு விற்கும் மருந்து கூடுதல் தரமானது என்று சொல்ல முடியுமா?என்பன போன்ற கேள்விகள் இயல்பாக நமக்குள் எழுகின்றன. இதற்கான காரணம் மற்றும் இதனை முறைப்படுத்துவது எப்படி என்பது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்…
“ஒவ்வொரு மருத்துக்கும் ஏற்ற விலையை மத்திய அரசு சரியான முறையில் தீர்மானிக்க வேண்டும். உற்பத்திக்கான அடக்க செலவை அடிப்படையாக வைத்துதான் மருந்தின் விலையைத் தீர்மானிக்க வேண்டும். இப்போது உள்ள நடைமுறை என்னவென்றால் 1 சதவிகிதத்துக்கு மேல் விற்கக்கூடிய மருந்துகளின் விலையிலிருந்து சராசரி விலையை தீர்மானிக்கிறார்கள். உதாரணத்துக்கு பாரசிட்டமால் மாத்திரையை பல நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன. அவற்றில் 1 சதவிகிதத்துக்கு அதிகமாக விற்கும் நிறுவனங்களின் விலையிலிருந்து சராசரி விலையை நிர்ணயிக்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. இம்முறையைக் கைவிட்டு, உற்பத்திச் செலவை முதன்மைப்படுத்தி விலை நிர்ணயம் செய்து அனைத்து நிறுவனங்களும் ஒரு மருந்தை நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையில் விற்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
மருந்துகளுக்கான வர்த்தகப் பெயரை முற்றிலும் தடைசெய்து மருந்தியல் பெயரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை கொண்டு வரப்பட வேண்டும். டோலோ 650 என்கிற பாரசிட்டமால் மாத்திரையைப் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு லஞ்சம் தரப்பட்ட விவகாரத்திலிருந்து பலவற்றுக்கும் இதனைச் சொல்லி வருகிறோம். மருந்தியல் பெயரில்தான் மருந்தை விற்க வேண்டுமே தவிர அதனைத் தயாரிக்கும் நிறுவனத்தின் வணிகப் பெயரில் விற்கக்கூடாது. வணிகப் பெயரில் விற்பதால்தான் அதனை விளம்பரப்படுத்துகிறார்கள், அதனைப் பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு பணமாகவோ அல்லது வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்கிற வகையிலோ லஞ்சம் கொடுத்து வணிகப்போட்டியில் முன்னுக்கு வரத் துடிக்கிறார்கள். இதனால் மருந்தின் விலையும் அதிகரிக்கிறது.
மருந்துச் சீட்டில் மருத்துவர்கள் மருந்தியல் பெயரைத்தான் பரிந்துரைக்க வேண்டும் என்கிற விதிமுறை கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம், மக்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தடுக்க முடியும். வணிகப் பெயரை மருத்துவர்கள் எழுதும்போது அதுதான் வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். போக, வணிகப்பெயர் பல குழப்பங்களை விளைவிக்கக் கூடியது. வெவ்வேறு பிரச்னைகளுக்கான மருந்துகளின் வணிகப்பெயர் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும். இதனால் மருந்தை மாற்றிக் கொடுக்கும் அபாயமும் இருக்கிறது” என்றவர் மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என்கிறார்.
“ஒரு மருந்தின் காப்புரிமைக் காலம் 20 ஆண்டுகள். இக்காலம் முடிந்துவிட்ட பிறகு அந்த மருந்தினை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். இதனைத்தான் ஜெனரிக் மருந்துகள் என்று சொல்கிறோம். இப்படியாக காப்புரிமை முடிந்துவிட்ட மருந்துகளை ரிவர்ஸ் இன்ஜினீயரிங் முறையில், அதாவது அம்மருந்தினை கண்டுபிடித்த நிறுவனம் தயாரித்த முறையிலிருந்து வேறுமுறையில் தயாரிக்கலாம். இன்றைக்கு மத்திய, மாநில அரசுகளின் மருந்தகங்கள் விற்கப்படுகிற ஜெனரிக் மருந்துகள் அனைத்துமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. அரசே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இதனை உற்பத்தி செய்யும்போது குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளைத் தரலாம். மருத்துவ உபகரணங்களையும் அரசு நிறுவனங்களே தயாரிக்கும்போது மேலும் பயனுள்ள விதத்தில் அமையும்” என்கிறார் ரவீந்திரநாத்.