ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்..!! – பொது வாக்கெடுப்பில் முடிவு

ஹவானா,

கம்யூனிஸ்டு நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர்.

1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அதன் பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், உள்ளேயும் ஓரின சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நாட்டின் புதிய அரசியலமைப்பில் ஓரின சேர்க்கயைாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் விதிகளை சேர்க்க கியூபா அரசு முடிவு செய்த நிலையில், பின்னர் அது பொதுவாக்கொடுப்பில் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சி அந்த முடிவை கைவிட்டது.

இந்த நிலையில் கியூபாவில் 1975-ல் பிறப்பிக்கப்பட்ட குடும்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்தது.

அதன்படி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் குறித்த முக்கிய முடிவுகளை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கியூபாவின் அரசு இந்த சட்ட மாற்றத்தை ஆதரித்ததோடு, மக்கள் அதை அங்கீகரிக்க வலியுறுத்தி நாடு தழுவிய பிரசாரத்தையும் நடத்தியது.

அதன் பலனாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த பொதுவாக்கெடுப்பில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர். மொத்தம் 74.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

39 லட்சம் பேர் ஆதரவு

தலைநகர் ஹவானாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்த அதிபர் மிகெல் டயஸ் கேனல், “மக்களிடையே பன்முகத்தன்மையை மேம்படுத்த இது மிகவும் அவசியமான சட்டத்திருத்தம். எல்லா மக்களும் சமம் என்ற உத்தரவாதத்தை வழங்கும் ஒரு மாற்றம் இது” என்றார்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முடிவுகள் வெளியாகின. அதன்படி 39 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மற்றும் வாடகை தாய் நடைமுறைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

19 லட்சம் பேர் எதிர்ப்பு

இதன் மூலம் கியூயாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதோடு இந்த சட்டத்திருத்தம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்க வழிவகை செய்கிறது.

அதே சமயம் மத குழுக்கள் மற்றும் பழமைவாதிகள் மத்தியில் இந்த சட்டத்திருத்தத்துக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருந்தது. சுமார் 19 லட்சம் பேர் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.