இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான சந்திப்பில் கிழக்கு ஆசியப் பிரச்சினைகள், உக்ரைன் போர், பரஸ்பர நலத் திட்டங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், ‘’ ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடான எங்களின் தனிநபர் பொருளாதாரம் 2,000 டாலர்கள் தான். இதனால் எண்ணெய் விலை எங்களுக்கு பெரிய கவலையாக மாறி எங்களின் முதுகை உடைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே எரிசக்தி சந்தை பெரும் அழுத்தத்தில் உள்ளது. விலை அதிகரிப்பு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறது என்றால் மறுபக்கம் அது கைக்கு வந்து சேர்வதிலும் சிமரமாக இருக்கிறது. எங்களைப் போன்று வளர்ந்து வரும் நாடுகள் எரிசக்தி தேவைகளை எப்படி சமாளிக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது, உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த எண்ணெய்யில் 0.2 சதவீதம் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இருந்தது. மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அது விலை அதிகரிப்பில் தான் பிரதிபலிக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன‘’ எனப் பேசியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து நியூயார்க்கில் உயர்மட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் விமர்சித்த ஜெய்சங்கர், ‘பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எஃப்-16 போர் விமானங்கள் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்’ என்றார். இதற்குப் பதிலளித்த அமெரிக்கா, ‘ பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான எங்களது உறவு கூட்டாளிகள் என்ற அடிப்படையில் இருக்கிறது’ என்றது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM