தெஹ்ரான்: ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் அதிபரின் மகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஃபாசியா மீது முன்னரே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஈரான் அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்றும், நபிகள் நாயகத்தை அவமதித்தாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானில் போராட்டத்தில் பங்கெடுத்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்ட பின்னணி: முன்னதாக, ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.