திருமங்கலம் : திருமங்கலம் நகரின் அடையாளங்களில் ஒன்றான குண்டாற்றில் படர்ந்துள்ள ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக குண்டாறு திகழ்ந்து வருகிறது. பொதுபணித்துறையினரின் பதிவுகளின் படி இந்த ஆறு தெற்காறு எனப்படுகிறது. நகரின் மையத்தில் ஓடி திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் விவசாய செழிக்க ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்த குண்டாறு இன்றைய நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டபநாயக்கனூரில் இருந்து சாத்தங்குடி, கண்டுகுளம், திருமங்கலம் நகரம், வடகரை, மேலக்கோட்டை, கீழக்கோட்டை வழியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே கடலில் கலக்கும் ஆறு குண்டாறு. இதனால் மதுரை மாவட்டம் மட்டுமின்றி அருகேயுள்ள விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களும் பயன் அடைந்து வருகின்றன.
ஆனால் இன்று குண்டாற்றின் நிலை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. திருமங்கலம் நகரில் செல்லும் குண்டாற்றில் ஆகாயதாமரைகள் அதிகளவில் வளர்ந்து ஆற்றையை மறைத்துள்ளனர். இதனால் மழைகாலங்களில் வரும் மழைநீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதற்கட்டமாக குண்டாறு தூர்வாரப்பட்டது.
சாத்தங்குடியிலிருந்து மேலக்கோட்டை வரையில் முதற்கட்டமாக குண்டாறு 3 கோடி ரூபாயில் தூர்வாரப்பட்டது. இதன்பின்பு மேலக்கோட்டையிலிருந்து கம்பிக்குடி வரையில் இரண்டாம் கட்டமாக 3 கோடியில் தூர்வாரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஆற்றினை சரிவர பொதுபணித்துறையினர் பராமரிக்காததால் தற்போது ஆற்றை மறைத்து ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து காட்சியளிக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக மதுரை விருதுநகர் நான்குவழிச்சாலையில் உசிலம்பட்டி சந்திப்பு பகுதியிலிருந்து அனுமார் கோயில் வழியாக ஆறுகண்பாலத்தை கடந்து செல்லும் பகுதி முழுவதும் ஆகாயதாமரையால் நிரம்பி துர்நாற்றம் வீசவதால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பராபரியமான குண்டாறு உசிலம்பட்டி அருகே உற்பத்தியாகி மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 250 கி.மீ தூரம் பயணம் செய்து சாயல்குடி அருகே கடலில் கலக்கிறது. தென்மாவட்டங்களில் நேரடியாக கடலில் கலக்கும் ஆறுகளில் ஒன்று என்ற பெருமையை கொண்டது குண்டாறு. ஆனால் திருமங்கலம் நகர் வழியாக செல்லும் போது இந்த ஆறு மிகவும் மோசமான நிலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. கழிவு நீர் கலப்பதால் ஆறு அசுத்தமாகிறது. ஆகாயதாமரை செடிகள், முள்செடிகள் அதிகளவில் ஆற்றில் வளர்ந்துள்ளதால் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் ஆற்றில் வாழ இயலவில்லை. இதனால் தண்ணீரின் மாசு அடைந்து அசுத்த நிலையை அடைந்து வருகிறது. எனவே, குண்டாற்றை முறையாக தூர்வார வேண்டும்,’’ என்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குண்டாறு மோசமானதால் கொசுத்தொல்லை வேறு அதிகளவில் ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவுமும் நிலையும் உருவாகி வருகிறது. மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமைப்புகளால் குண்டாறு ஆண்டுக்கு ஆண்டு அகலம் குறைந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆற்றினை தூர்வார வேண்டும். ஆனால் தற்போது ஏழு ஆண்டுகளாகியும் மீண்டும் இதுவரையில் தூர்வாரப்படவில்லை. இதனால் திருமங்கலம் நகரின் பாரம்பரியமான அடையாளமாக திகழும் குண்டாறு தனது பொழிவை இழந்து வருகிறது. பொதுபணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் குண்டாற்றினை தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.
கழிவுநீர் கலப்பதால் தான்…
இதுகுறித்து பொதுபணித்துறையினரிடம் கேட்டபோது, ‘‘குண்டாறு எனப்படும் தெற்காறு, கவுண்டமாநதி ஆகிய இரண்டும் கடந்த 2015ம் ஆண்டில் அடுத்தடுத்து தூர்வாரப்பட்டது. குண்டாறு சாத்தங்குடி மேலக்கோட்டை வரையிலும், தொடா்ந்து மேலக்கோட்டை முதல் கம்பிக்குடி வரையில் இரண்டு கட்டமாக தூர்வாரப்பட்டது. இதே போல் கவுண்டமாநதி சௌடார்பட்டியிலிருந்து திரளிவரையிலும், திரளி முதல் அரசபட்டி வரையிலும், அரசபட்டி முதல் குராயூர் வரையிலும் மூன்று கட்டமாக தூர்வாரப்பட்டது. இந்த இரண்டு ஆறுகளும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள புதுப்பட்டியில் ஒன்றாக இணைந்து குண்டாறாக மாறி செல்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் என்ற இடத்தில் குண்டாறு கடலில் கலக்கிறது. திருமங்கலம் நகரில் குண்டாறு மாசுபட வீடுகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் குண்டாற்றில் ஆகாயத்தாரை வளர்கிறது. இது குறித்து பலமுறை நாங்கள் பொதுமக்களிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகம் இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குண்டாற்றினை பாதுகாக்க முடியும்’’ என்றனர்.