சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்.1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
29-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
28-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 6 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இடங்களில் தலா4 செமீ, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
29-ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீவேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.