உத்தராகண்ட் மாநிலத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் அங்கிதாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருக்கிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார். முன்னதாக, கடந்த 18-ம் தேதி முதல், சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை என சொல்லப்பட்டது. இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல்போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதா விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில், அங்கிதா பண்டாரியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த விவகாரத்தை கண்டித்து உத்தராகண்ட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த விவகாரத்தில் புல்கிட் ஆர்யா கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது தந்தை வினோத் ஆர்யா பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அங்கீதா பண்டாரி குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று அறிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM