சென்னை: காவல்துறையினர் முன்னிலையே மீன்வளத்துறை அதிகாரியை திமுக பிரமுகர் மிரட்டி தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களின் மிரட்டல்களும், ஆணவப்போக்கும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அடிக்கல் நாட்டு விழாவின்போது, திமுக எம்.பி. நடந்துகொண்ட விதம் அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் சென்னையில் திமுக எம்எல்ஏ தனியார் நிறுவன அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி, சென்னையில் திமுக கவுன்சிலரின் கணவர் ஒருவர் புதிய வீடு கட்டும் நபரிடம் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ராணிப்பேட்டை மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஒன்றிய செயலாளரு மான தமிழ்செல்வன் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஆவின் பெண் முகவரின் கையை வெட்டி விடுவேன் என்று திமுக பிரமுகர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆவின் முகவர்கள் கொலை மிரட்டல் மட்டுமல்லாது ஆவினில் கையாடலும் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபோல ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடித்து வரும் மீனவர்களை எச்சரிக்கும் வகையில், அந்த பகுதி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அதிகாரிகளைத் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டியதுடன்,. காவல்துறையினர் முன்பே அதிகாரிகளை தாக்க முயற்சித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அரசு அதிகாரியை மிரட்டும் திமுக பிரமுகர்அந்தோணி ராய் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதும் அடிக்க கையை ஓங்குவதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கூறிய ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மீன்வளத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்கள்,அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினரின் அடாவடித் தனம் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளனர்.
வீடியோ உதவி: நியூஸ்ஜெ