2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை அனுப்பி வைக்குமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த மாதிரிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அலங்கார ஊர்தியின் மாதிரிப் படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் அலங்கார ஊர்தி மாதிரிகள் 4 கட்டங்களாக ஆய்வு செய்து அதன் பின்னரே, ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் இறுதி செய்யப்படும். சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டு கால சாதனைகள் உள்ளிட்ட தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பாரதியார், வ.உ.சி, வேலுநாச்சியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் தாங்கிய அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் நிராகரித்திருந்தது. இதை அடுத்து, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.