பெரம்பூர்: கொடுங்கையூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில், அவரை நாற்காலியில் அமரவைத்து கொன்ற நண்பரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் பகீர் தகவல்கள் வெளியாகின.
சென்னை கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி பெரியநாயகி (38), 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் நண்பர் ஆறுமுகம் (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் கட்டிட மேஸ்திரி. கடந்த சில ஆண்டுகளாக குறைந்த தொகைக்கு ஜெயபால் கட்டிட பணிகள் மேற்கொண்டதால், அவருக்கு ஆர்டர் குவிந்து வருவதை பார்த்து ஆறுமுகம் மறைமுக முன்விரோதத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஜெயபால் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட்டனர். அன்று வேலை இல்லாததால், மது அருந்தியபடி ஜெயபால் வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகம், கூலி தொழிலாளி ரமேஷ் ஆகிய இருவரும் சென்று, ஜெயபாலின் வீட்டுக் கதவை தட்டினர். அவர் வெளியே வராததால் இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறி கொக்கியில் தூக்கிட்ட நிலையில், நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கொடுங்கையூர் போலீசார் விரைந்து வந்தனர். ஜெயபாலின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது இடது கண், தொடையில் லேசான காயம் இருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், அவரது கழுத்தை நெரித்த காயம் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஜெயபால் தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த கட்டிட மேஸ்திரி ஆறுமுகம் (40), கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தனக்கு குறைந்த கூலி தருவதால் முன்விரோத தகராறில் மேஸ்திரி ஜெயபாலை ரமேஷ் கொன்றிருக்கலாம் என ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதை ரமேஷ் மறுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆறுமுகத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, அவர் கட்டிட மேஸ்திரி ஜெயபாலை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு பகீர் தகவல்களும் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆறுமுகத்திடம் நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில், இருவருமே கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்துள்ளனர். ஜெயபால் குறைந்த தொகைக்கு கட்டிடப் பணிகளை சிறப்பாக செய்து வந்ததால், அவருக்கு பல கட்டிட பில்டர்கள் ஆர்டர் கொடுத்து வந்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட மறைமுக முன்விரோதம் காரணமாக, சம்பவத்தன்று ஜெயபாலின் வீட்டுக்கு ஆறுமுகம் முன்னதாகவே சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் மயங்கி கிடந்த ஜெயபாலின் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் அவரது சடலத்தை மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்கிட்டுள்ளார். எனினும், அவரது உடலை தூக்க முடியாததால், நாற்காலியில் தூக்கிட்ட நிலையில் அமரவைத்துவிட்டு ஆறுமுகம் தப்பி சென்றுள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல் ரமேஷுடன் ஆறுமுகம் வந்து நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகைள ஆய்வு செய்து, முன்னதாக ஜெயபாலின் வீட்டுக்கு ஆறுமுகம் வந்து கொலை செய்துவிட்டு சென்றிருப்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து ரமேஷை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.