பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க இரண்டு கட்டங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துள்ள நிலையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையான பல போராட்டங்களை நடத்தியது மற்றும் மதக் கலவரங்களை தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இவற்றின் காரணமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிஎஃப்ஐ மற்றும் அந்த அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் நேற்றும், கடந்த 22ஆம் தேதியும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு `ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது மற்றும் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது’ உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கான ஆதாரங்கள் இரண்டு கட்டங்களாக நடந்த சோதனைகளில் கிடைத்துள்ளன என்று சொல்லப்படுகிறது. மேலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான ஷாகின்பாக் போராட்டம் மற்றும் கிழக்கு டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் நேற்று தகவல் வெளியானது.
முன்னதாக தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தின. இந்த சோதனைகளில் 120 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தைக்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாகவும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM