உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று (செப்.27) கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானலிங்கம் மற்றும் ஆதியோகிக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் ஈஷா மையத்திற்கு சென்று சத்குருவை சந்திப்பது, அங்கு இருக்கும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்துவதும் வழக்கம். அந்த வரிசையில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலும் சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னதாக கோவை அவினாசி லிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அவர், அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களில் சமூகவியல், இயற்பியல், வேதியல், கணினி துறை, உணவு பதப்படுத்தும் துறைகளில் கருத்தரங்கு நடத்தி வெற்றி பெற்ற அவினாசி லிங்கம் கல்லூரியை சேர்ந்த 16 மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. இது நல்ல கல்வி கொள்கை. அரசியல் விமர்சனங்களை தாண்டி விரைவாக செயல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு புதிய பரிமாணங்களை அமைக்கும் வாய்ப்பாகும். ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிறந்த அறிவு சென்றடைய வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும் என்றார்.
ஐந்து மாநிலங்களின் ஆளுநர்களின் பதவிக்காலம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை முடிவடையவுள்ளது. எனவே இந்த மாநிலங்களுக்கு புதிய ஆளுநரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்திபென் படேல், மேகாலயாவைச் சேர்ந்த சத்ய பால் மாலிக், அசாமில் இருந்து ஜெகதீஷ் முகி மற்றும் அருணாச்சலத்தைச் சேர்ந்த பி.டி.மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்ய உள்ளனர்.
தற்போது உத்தரபிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேல் உள்ளார். அவரது பதவிக்காலமும் நிறைவடைய உள்ளதால், அவர் வேறு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வரவில்லை.