சிக்கியது ’மிஷன் 2047’ சிடி… பதறிப் போன அதிகாரிகள்- PFI போட்ட பிளான்?

PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் பி.எஃப்.ஐ அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு நடத்திய மத்திய புலனாய்வு அமைப்புகளின் கைகளில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ தலைவரான முகமது நதீமிடம் இருந்து முக்கிய ஆவணம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் ஐ.இ.டி குண்டுகளை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி தயாரிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்ற ஆவணம் மற்றொரு பி.எஃப்.ஐ தலைவரான அகமது பெக் நத்வியிடம் இருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ துணைத் தலைவரிடம் இருந்து ”மிஷன் 2047” என்ற பெயரிலான ஆவணம் மற்றும் சிடி கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் அடுத்தகட்டமாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட பென் ட்ரைவில் ஐஎஸ்ஐஎஸ், கஜ்வா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வீடியோக்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஃப்.ஐ அமைப்பு மீதான தடைக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரித்து வருகிறது. உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிற்கு பி.எஃப்.ஐ அச்சுறுத்தும் விஷயமாக இல்லையெனில் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்? என்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் இணையதளம் முடக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.