பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் 2.40 கோடி வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு, தினமும் சராசரியாக 4 முதல் 5 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும் சென்னையில் 80 ஆயிரம் உட்பட மாநிலம் முழுவதும் 2.50 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது.
பெரும்பாலான காஸ் ஏஜன்சிகள் வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுவதில்லை. இதனால், அன்று சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. தற்போது நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் வர உள்ளன.
இதனால் எரிவாயு சிலிண்டருக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, பலரும் சிலிண்டர் வேண்டி எண்ணெய் நிறுவனங்களிடம் முன்பதிவு செய்து வருவதால், சிலிண்டர் முன்பதிவு வழக்கத்தை விட கூடுதலாக,10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘மூன்று எண்ணெய் நிறுவனங்களும் சிலிண்டர் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் வீடுகளில் டெலிவரி செய்கின்றன. சிலிண்டர் நிரப்பும் ஆலைகளில் தேவையான அளவுக்கு காஸ் இருப்பு உள்ளது.
எனவே, தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது, சிலிண்டர் முன்பதிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு உடனே சிலிண்டர் கிடைக்க ஞாயிற்றுக் கிழமையும் டெலிவரி செய்யப்படுகின்றன’ என்று கூறினார்.