புதுடெல்லி: பாகிஸ்தானில் சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம் புனெர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
பின்னர் அப்பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தியவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இதையடுத்து சீக்கிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புரா கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் கொண்டு சென்று உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில், இக்பால் சிங் லால்புராவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இந்த விஷயத்தை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கொண்டு சென்று தனது கண்டனத்தை தெரிவித்தது. சம்பவம் குறித்து உண்மையான விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் சமூகத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார்.