நாடு முழுவதும் 24 மாநிலங்களில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள் மற்றும் படுகொலைகளில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதன் பேரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 22ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் 2வது முறையாக பி.எஃப்.ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாகவே இந்த சோதனை நீடித்தது.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 தடை விதித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும் என்று, அறிவிக்கப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காவல் துறை துணை ஆணையர்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேப்போல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான். அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ, நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மாற்று பெயரில் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மற்றும் பாஜக முயற்சி செய்கின்றன.
மதத்தையும், ஜாதியையும் தனது 2 கண்களாக வைத்து பாஜக அரசியல் செய்கிறது. 20,000 புத்தகங்களை படித்ததாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீண்டாமை இல்லை என கூறுகிறார்.
ஆனால் 60 ஆயிரம் புத்தகங்களை படித்த அம்பேத்கர் தீண்டாமை இருக்கிறது என தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார. அதை அண்ணாமலை படிக்க வேண்டும். இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஏற்கனவே சீமான், திருமாவளவனை உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மாற்று பெயரில் இயங்க வேண்டும் என சீமான் ஐடியா கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக சீமானுக்கும் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என்று, கருதப்படுவதால் நாம் தமிழர் கட்சியிலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.