பழம் வாங்க வரும் அனைவருக்கும் புத்தகங்களை இலவசமாக வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார் தஞ்சையை சேர்ந்த பழ வியாபாரி ஒருவர்.
தஞ்சை விளார்சாலை பூச்சந்தை எதிரே உள்ளது ‘தோழர் பழக்கடை’. அந்த பகுதியில் இருப்பவர்கள் யாரும் இந்த கடையை அறியாமல் இருந்ததே கிடையாது. ஏனெனில் கடை வைத்திருக்கும் ”ஹாஜா மைதீன்” பழக்கடையில் பழங்களோடு புத்தகங்களையும் வரிசைகட்டி அடுக்கி வைத்திருக்கிறார். பழங்களைத்தான் இவர் விற்கிறாரே தவிர புத்தங்களை அல்ல. பழம் வாங்க வரும் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை இலவசமாக அளித்து வருகிறார். உடலுக்கு நன்மை தர பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தர புத்தகங்கள் என்ற வழக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக பழம் வாங்க வரும் அனைவருக்கும் புத்தகங்களை வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார் இந்த பழ வியாபாரி. இதன் மூலம் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தோழர் பழக்கடை மிகப் பிரபலமாக அறிமுகமாகியிருக்கிறது. 60 வயதான இந்த குடும்பத்தலைவர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் மகளை கிறிஸ்துவருக்கும், இரண்டு மகன்களை இஸ்லாமியப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இவர் மனைவி கவுரி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்.
தோழர் ”ஹாஜா மைதீன்” ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நிலையிலும், படிப்படியாக புத்தகங்களை வாங்கி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். கடைக்கு வருபவர்களுக்கு அவர்களால் புத்தகம் வாங்க மனம் இல்லாவிட்டாலும் தான் தரக்கூடிய இந்த புத்தகத்தையாவது அவர்கள் வாசித்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெரியவர்கள் என்றால் திருக்குறள், ஆன்மீக புத்தகங்கள் மற்றும் சமூக நீதி புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும், சிறியவர்கள் என்றால் அவர்களுக்கு ஏற்றவாறு ஓவியம், திருக்குறள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் வியாபாரமும் இல்லாமல் புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த பணியை செவ்வனே செய்து வருவது மன நிம்மதியை அளிப்பதாகவும் தெரிவிக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM