தமிழ் சினிமாவில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை அடுக்கடுக்காக கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தான் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு நாயகர்களின் படங்களும் பெரும்பாலும் ரசிகர்களுக்கு எவ்வித சலிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறது, குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான கதையம்சம்சம் கொண்ட படமாக இவர்களது படங்கள் அமைந்துள்ளது. இந்த தலைமுறை இளைஞர்களிடம் இந்த இரண்டு நடிகர்களுக்கும் செல்வாக்கு உள்ளது, இவர்களது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது தனுஷ் ‘ராக்கி’ படம் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படம் 1980 காலகட்டத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாவாகிறது.
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாகவும், ‘மாநாகரம்’ படம் மூலம் பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் தென்காசி பகுதியில் படமாக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஆக்ஷன் திரைப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அருண் விஷ்வா தயாரிக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்திகேயனின் ‘மாவீரன்’ ஆகிய இரண்டு படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்கு பின்னான ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென அமேசான் நிறுவனம் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ரூ.38 கோடியும், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்திற்கு ரூ.34 கோடியும் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷின் உதவியால் சினிமாவிற்குள் நுழைந்தார். தற்போது அவரது படங்களுக்கு இணையாக இவரது படங்களுக்கும் வியாபாரம் ஆவதை எண்ணி அனைவரும் திகைத்து போய் உள்ளனர்.