சின்னாளபட்டி: ஆத்தூரில் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரிலிருந்து காமராஜர் நீர்தேக்கத்திற்கு செல்லும் வழியில், சொக்குப்பிள்ளை ஓடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஓடை வழியாகச் செல்லும். இந்த தரைப்பாலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. தடுப்புச்சுவரும் இல்லை. தற்போது மழை காலம் என்பதால், பாலத்தின் கீழ் உள்ள ஓடையில் தண்ணீர் அதிகமாகச் செல்கிறது.
கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கும்போது, அதிர்வு ஏற்பட்டு பாலம் இடிந்துவிழும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் ஓடையில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி சொக்குப்பிள்ளை ஓடையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தரைப்பாலத்தின் பக்கவாட்டில் எச்சரிக்கை தடுப்பு தட்டிகள் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.