15ஆவது உட்கட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். இதனிடையே 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் பட்சத்தில், அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில், திமுக உள்ளது.
இந்நிலையில் உட்கட்சித் தேர்தலில் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். அப்பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், திமுக அமைப்பு ரீதியான மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால், மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிக்க பலரும் தங்களுக்கு தெரிந்த வகைகளில் லாபி செய்து வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர் பதவிக்காக நீதிமன்றம் சென்ற சம்பவமும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பாக திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ” செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.