திருப்பதி: திருப்பதி – திருமலை இடையே போக்குவரத்து வசதி காலத்துக்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில் நேற்று முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
சுயம்புவாக திருமலையில் குடிகொண்டுள்ள திருமாலை முடியாட்சி காலம் முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசித்து வருகின்றனர். முதன்முதலில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை மட்டுமே இருந்துள்ளது.
இந்தப் பாதைகள் வழியாக சிறுவர்கள் முதற்கொண்டு, பெரியவர்கள் வரை நடந்தே திருமலைக்கு சென்று, அங்கேயே இரண்டொரு நாட்கள் தங்கி சுவாமியை 2 அல்லது 3 முறை தரிசித்து விட்டு குடும்பத்துடன் ஊர் திரும்பி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் செல்லும்வகையில் பாதை அகலப்படுத்தப்பட்டது. இதன் வழியாக அரசர்கள் மற்றும் ஜமீன் குடும்பத்தினர் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 முறை திருமலைக்குச் சென்று தரிசனம் செய்து, தங்கக் காசு அபிஷேகம் கூட செய்துள்ளதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாகனங்கள் மூலம் திருமலைக்கு செல்வந்தர்கள் சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் முதலாவது மலைப்பாதை அமைக்கப்பட்டது. இதன் வழியாக கார், ஜீப் மற்றும் பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்லத் தொடங்கினர். கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 வரை திருப்பதி – திருமலை இடையே திருப்பதி தேவஸ்தானமே பேருந்துகளை இயக்கியது. அதன் பின்னர் 114 பேருந்துகளையும் 713 ஊழியர்களையும் ஆந்திர அரசிடம் ஒப்படைத்தது. மேலும், திருமலை மற்றும் திருப்பதியில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேவஸ்தானம் நிலமும் வழங்கியது.
திருப்பதியில் இருந்து தற்போது திருமலைக்கு மட்டுமின்றி சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், ஒசூர், காஞ்சிபுரம், தருமபுரி, திருத்தணி, சோளிங்கர், திருவண்ணாமலை என பல ஊர்களுக்கு ஆந்திர அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. திருப்பதி – திருமலை இடையே தற்போது தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் திருப்பதி – திருமலை இடையிலான போக்குவரத்து நேற்று முதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இதன்படி பேட்டரி மூலம் இயங்கும் 100 சொகுசு பேருந்துகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருமலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி திருப்பதியில் இருந்து திருமலைக்கு முதற்கட்டமாக 50 பேருந்துகளும் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு 14 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவை தவிர மதனபள்ளி, கடப்பா, நெல்லூர் ஆகிய ஊர்களுக்கு தலா 12 பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.