தமிழகத்தில் பி.எஃப்.ஐ அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டு, அதன் தொடர்ச்சியாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை குறிவைத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ”சிலந்தி” பகுதியில் ‘துப்பாக்கி குண்டு vs பெட்ரோல் குண்டு’ என்ற பெயரில் நையாண்டி செய்யும் வகையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதாவது, மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக வெளியிட்டுள்ளனர்.
அதில், துப்பாக்கிக்குள் இருந்து பாய்வது மட்டுமின்றி பல தூரம் பயணம் தாக்கும் துப்பாக்கி குண்டையும், வீசப்பட்டு எட்டும் தூரம் வரை எரிந்து சில நேரங்களில் வெடித்தும், பல நேரங்களில் புஸ்வாணமாகிவிடும் பெட்ரோல் குண்டையும் ”குண்டு” என்று அழைப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி குண்டை பயன்படுத்தி இரண்டு பெண்கள் உட்பட 13 பேரின் உயிரை போலீசார் பறித்தனர்.
இவர்களில் 12 பேரின் தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. இந்த செய்தி அறிந்து தமிழ்நாடே பதைபதைத்தது. அன்றைய முதல்வரோ இதையெல்லாம் டிவியில் பார்த்து தெரிந்து கொள்ளுமளவிற்கு செயல்பட்டார். தமிழகத்தில் சமீபத்தில் வீசப்பட்ட சாதாரண ஜுஜுபியான பெட்ரோல் குண்டு பல இடங்களில் வெடிக்கக் கூட இல்லை. இன்னும் சில இடங்களில் எரியக்கூட இல்லை.
இருந்தும் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து கொண்டு இப்படி பெட்ரோல் குண்டை புகழ்ந்து பேசுவார்கள் என்று நினைக்கவில்லை என துப்பாக்கி குண்டு பேசுவதாக கற்பனையான வடிவில் எழுதியுள்ளனர். இந்த சூழலில் ஏதோ பெரியதாக நடக்கும் என்று நினைத்தோம். எல்லாமே பிசுபிசுத்து போய்விட்டது என்று நினைத்து பாஜக தலைமையில் அதன் தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலின் போதே, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என்று பேசி மறைமுக உசுப்பலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவத்தில் பல உயிர்கள் பலியான நேரத்தில் அந்த மாவட்டமின்றி பக்கத்து மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்றவற்றில் கூட சில நாட்களுக்கு இணைய வசதி முடக்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகின் பக்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கண்டனத்தை முன்வைத்தது.
அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கண்டனக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நாட்டிலே சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக மத்திய அரசை ஆண்ட பாஜக சார்பில் யாரும் கூறவில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளில் அண்ணாமலை, ஜெயக்குமார் போன்ற கோமாளிகள் கொளுத்திப் போடும் சிரிப்பு வெடிகள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று நகைச்சுவை வசனத்துடன் நிறைவு பெறுகிறது.