தென்காசி சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய் 27 லட்சம் பணம் குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் புளியரை மற்றும் அரியங்காவு சோதனை சாவடிகளில் சோதனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கமாக அரியங்காவு மதுவிலக்கு பிரிவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் கேரளா அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டதில், ஒரு வாலிபரின் கைப்பையில் பேப்பரில் சுற்றப்பட்ட கட்டு ஒன்று இருந்தது.
இதனை போலீசார் பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக, மொத்தம் 27 லட்சம் ரூபாய் இருந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தங்கம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்த வாலிபரையும், ரூபாய் 27 லட்சம் பணத்தையும் தென்மலை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்கள் இந்த இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.