சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். கொத்தனார் வேலை பார்த்துவந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அருகில் வசிக்கும் கொத்தனார் ஆறுமுகம் என்பவர், ஜெயபால் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஜெயபால் தூக்கிட்ட நிலையில், நாற்காலியில் சடலமாகக் கிடப்பதாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். ஆறுமுகத்தின் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கொடுங்கையூர் போலீஸார், ஜெயபால் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், தன் கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஜெயபாலின் மனைவி கொடுத்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர் போலீஸார். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜெயபால் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, ஜெயபால் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவித்த ஆறுமுகத்திடம் போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆறுமுகம் ஜெயபாலை கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். ஆறுமுகத்துக்கு வரும் கொத்தனார் வேலைகளை ஜெயபால் வாங்கி செய்திருக்கிறார். இதனால், ஆறுமுகம் ஜெயபால்மீது கடும் கோபத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, ஆறுமுகம் ஜெயபாலின் வீட்டுக்கு வந்த சமயத்தில், அவர் மதுபோதையிலிருந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஆறுமுகம் ஜெயபாலின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அவர் வீட்டிலிருந்த புடவையைக் கொண்டு தூக்குப் போட்டதுபோல் காட்டியிருக்கிறார். இருந்தபோதிலும், ஜெயபாலை தூக்க முடியாத காரணத்தினால், நாற்காலியிலேயே அமர வைத்துவிட்டு. பின்னர் எதுவுமே தெரியாதது போல, நண்பருடன் வந்து நாடகமாடியிருக்கிறார்.
ஆறுமுகத்தை கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.