சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் பங்கேற்றார. அப்போது அவரை சந்தித்த நந்தினி என்ற நரிக்குறவர் பெண் தான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தனக்கு உரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அழைத்து அவருக்கு தேவையான மருத்துவ உதவி செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது இதனையடுத்து கணவர் வெங்கடேசன் மற்றும்
பெண் குழந்தையுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்த நரிக்குறவர் பெண் நந்தினி குழந்தையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தங்களின் பரிந்துரையால் தான் நல்ல முறையில் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், அதனால் என்னுடைய குழந்தைக்கு தாங்கள் தான் கடவுள் என்றும் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
குழந்தையை கையில் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குழந்தைக்கு சாதனா என்று பெயர் வைத்தார் அப்போது உடன் இருந்த கூடுதல் ஆட்சியர் குழந்தையின் காதில் சாதனா என்று பெயர் உச்சரிக்கவே பெற்றோர்கள் உற்சாகத்தில்
திளைத்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பழம் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு நரிக்குறவர் இன மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.