கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக எழுத்த குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அம்மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. 40 சதவீத கமிஷன் அரசு (40percentsarkara.com) என்ற பெயரில் இணையதளம் தொடங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை காங்கிரஸ் கட்சி கோரியது. அதனைத் தொடர்ந்து, பேடிஎம் ஸ்கேனர் போன்று ‘பேசிஎம்’ எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டரை வெளியிட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் படம் க்யூஆர் கோட் வடிவில் இருந்தது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடங்கிய 40percentsarkara.com இணையதளத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. இவ்வாறாகத் தொழில் நுட்பங்களின் உதவியுடன் பாஜக-க்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ‘வார் ரூம்’ தலைவர் சசிகாந்த் செந்திலிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
“பா.ஜ.க-வுக்கு எதிரான புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்து வரும் காங்கிரஸுக்கு, தேர்தலில் அது பயனளிக்குமா?”
“வார் ரூம்’ தலைவராக பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. இப்போது நாங்கள் முன்னெடுத்திருக்கும் பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதே போல் பல புதிய வடிவ பிரசாரங்களை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான பயனும் இருந்து வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் கர்நாடக பா.ஜ.க அரசு செய்யும் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் வேலையில் வெற்றியும் கண்டிருக்கிறோம்”
“எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு என்றால்?”
“பொதுவாக கான்ட்ராக்டர்கள், ‘தங்களுடைய பேலன்ஸ் க்ளீயர் ஆகாது’னு அரசாங்கத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள். ஆனால், இன்று அவர்களே வெளியே வந்து, ‘கர்நாடக பா.ஜ.க அரசு 40% கமிஷன் கேட்கிறார்கள்’ என்று வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள். அப்படி ஒரு சூழல்தான் கர்நாடகாவில் நிலவுகிறது. அந்த செய்தியை மக்களிடம் எளிய வகையில் கொண்டு செல்ல பல பிரசாரங்களைக் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது”
“எவ்வளவுதான் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பாஜக-வுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாலும் அது தேர்தலில் பிரதிபலிப்பதில்லையே, கார்நாடகவில் அது மாறுமா?”
“மேலோட்டமாக இல்லாமல் கிளை அளவில் வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு, கோபம் போன்ற விஷயங்கள் எல்லாமே வைரலாக பரவக் கூடிய விஷயம். எனவே பாஜக-வினர் ஒருவர் வேலை செய்யும் இடத்தில், எதிர்முகாமில் இருப்பவர்கள் ஐந்து பேர் வேலை செய்ய வேண்டியுள்ளது. இங்கு நல்லது, கெட்டது பரவுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், நல்ல விஷயங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் போது அதை ஏற்கிறார்கள். அதைதான் காங்கிரஸ் போன்ற ஜனநாயக சக்திகள் முன்னெடுத்து வருகிறோம்”
“ராகுல் காந்தியின் கர்நாடக பயணத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?”
“கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 21 நாள் பயணத்திற்கான பலன் இருக்கும் என்று நம்புகிறோம். கர்நாடகாவில் காங்கிரஸுக்கான பலம் கூடியிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் பயணம் அதற்கு மேலும் வலு சேர்க்கும். மேடைகள் மீது நின்று பேசுவது அடுத்த விஷயமாக இருந்தாலும், எளிய மக்களுடன் இணைய கூடிய தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். எனவே இயற்கையாகவே அவர் மீது ஓர் அன்பு மக்களிடம் இருக்கிறது. இதுதான் அவர் பலம். அந்த பலத்துடன் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து வரும் தேர்தல்களில் பாஜக-வை வீழ்த்துவோம் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை”