சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 92, காங்கிரஸ் கட்சிக்கு 18, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 3, பாஜகவுக்கு 2, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ உள்ளனர்.
இந்நிலையில், தனது கட்சி எம்எல்ஏ-க்கள் 10 பேரிடம் தலா ரூ.25 கோடிக்கு பேரம் பேசி ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்கும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ முயற்சியில் பாஜக, ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இதேபோன்ற குற்றச்சாட்டை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கடந்த மாதம் கூறி, சட்டப்பேரவையில் தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அதில் வெற்றி பெற்றார்.
தற்போது அதே பாணியில், பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் நேற்று நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார். அப்போது இதற்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், கோஷம் எழுப்பினர். நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ-க்கள் இருவர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் முதல்வர் பகவந்த் மான் பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து, சட்டப்பேரவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.