அங்குச்செட்டிப்பாளையம்: அங்குச்செட்டிப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிட வகுப்பறையின் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்களை, மழைக் காலத்தில் எங்கு அமரவைப்பது என புரியாமல் பள்ளித் தலைமையாசிரியர் தவித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குச்செட்டிப்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 600 மாணவ, மாணவியர் பயிலுகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைக் கட்டிடங்களில் ஓடு வேயப்பட்ட நான்கு வகுப்பறைக் கட்டிடங்கள் பழுதாகிவிட்டதால், அவற்றை இடித்துவிட்டு புதிய வகுப்பறைக் கட்டித் தருமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் பண்ருட்டி பொதுப் பணித் துறை செயற்பொறியாளருக்கு கடிதம் அளித்து ஓராண்டாகியுள்ளது. ஆனால், அவர்கள் கட்டிடத்தை வந்து பார்வையிட்டு, அதன் உறுதித் தன்மையையும் சோதித்து, கட்டிடத்தை இடிக்கப்படும் என கூறிவிட்டுச் சென்று 6 மாதங்களாகிறது. ஆனால் இதுவரை பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்படவும் இல்லை, புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டப்படவும் இல்லை.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் பழுதடைந்து பூட்டப்பட்ட கட்டிடடத்தின் வராண்டாவிலும், சைக்கிள் ஸ்டாண்டிலும், பள்ளி கலைநிகழ்ச்சி மேடைகளிலும் மாணவர்களை அமரவைத்து, ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்திவருகின்றனர். தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், மாணவர்களை எங்கு அமரவைத்து பாடம் நடத்துவது என புலம்பும் பள்ளி ஆசிரியர்கள், தற்போது காலாண்டு தேர்வு நடைபெறும் சூழலில் அவர்களை அருகருகே அமர வைக்கமுடியாது எனவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் வெண்ணிலாவிடம் கேட்டபோது, ”நாங்கள் கடிதம் கொடுத்து ஓராண்டாகிவிட்டது. அவர்கள் வந்து பார்வையிட்டு சென்று 6 மாதமாகிவிட்டது. இரு வகுப்பறைக் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்தும் 6 மாதமாகி விட்டது. ஆனால் பொதுப்பணித் துறையினர் அதுகுறித்து தங்களிடம் இதுவரை பேசவில்லை” என்றார்.