சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறைக்கு தகுதியான அமைச்சரும், அதிகாரிகளும் நியமிக்கப்படாததால் துக்ளக் தர்பார் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு, பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக் குழந்தைகளை குழப்பி வருகிறது. தற்போது, 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவித்தை மாற்றி அறிவித்து உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முதல்முறையாக அக்டோபர் 5ந்தேதி வரை என அறிவிக்கப்பட்டது. பின்னர், அதை மாற்றம் செய்து தொடக்கப்பள்ளிகளுக்கு 9ந்தேதி வரை என நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 3வது முறையாக 1முதல் 5வரையிலான வகுப்புகளுக்கு அக்டோபர் 12ந்தேதிவரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு இல்லை என்றும், 5ந்தேதிவரைதான் விடுமுறை, 6ந்தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது 4வது முறையாக விடுமுறை தினத்தை மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் தெளிவற்ற முடிவுகள், அறிவிப்புகளால் ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பலர் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் திறமையற்ற மற்ற தெளிவற்ற நடவடிக்கையால், மாநில கல்வித்துறையில் துக்ளக் தர்பார் நடைபெறுவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.