நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பல்வேறு ஊர்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் என் ஐ ஏ நடத்தும் மிகப் பெரிய சோதனை இதுதான் என்றும் கூறப்பட்டது.
என் ஐ ஏ மட்டுமல்லாமல் அமலாக்கத்துறையும் சோதனைகளை முடுக்கிவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்), தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில் (ஏஐஐசி), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எப்படி உருவானது என்று பார்க்கலாம். உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் சிமி என்ற இஸ்லாமிய இயக்கம் 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் பயங்கரவாத செயல்களில் ஈடுபவதாக கூறி 2001ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
பின்னர் 2003ஆம் ஆண்டு தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் 2006ஆம் ஆண்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. சிமி இயக்கத்தில் இருந்தவர்கள் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் இயக்கங்கள் தொடங்கி செயல்பட்டு வந்தனர்.
இந்த இயக்கங்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக பணம் வருவதாகவும் என் ஐ ஏ தரப்பில் கூறப்படுகிறது.
இதனாலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.