அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் 150 நாள்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவை தொண்டர்களுடன் கடக்க திட்டமிட்டிருக்கிறார் ராகுல் காந்தி. செப்டம்பர் மாதம் 7 தேதி தொடங்கிய இந்த நடைப்பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 19 நாள்களாக 450 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு ஏராளமான மக்களைச் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், கேரளாவில் நடைப்பயணத்தை நிறைவு செய்து நாளை (வியாழக்கிழமை) மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலம் பகுதிக்கு வருகைத்தர இருக்கிறார். 6 கி.மீட்டர் தூரம் நடைப்பயணமாக வந்து கூடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து -30-ம் தேதி கர்நாடகாவுக்குச் சென்று நடைப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.