பிஎஃப்ஐ தடை, பின்னணி, எதிர்வினைகள்: ஒரு விரைவுப் பார்வை

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா – UAPA) என்ற சட்டத்தின் பிரிவு 3-ஐ பயன்படுத்தி பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது.

‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எங்கிருந்து ஆரம்பித்தது? – கர்நாடகா, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்கள்தான் முதன்முதலில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தன. அதற்குக் காரணமாக சில விஷயங்கள், பாஜக ஆளும் அந்த மூன்று மாநிலங்களால் முன்வைக்கப்பட்டன. அதாவது, வெளிநாடுகளில் உள்ள மதவாதக் குழுக்களிடமிருந்து நிதி பெற்று, அதைக் கொண்டு இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு இந்த அமைப்பு குந்தகம் விளைவிக்கிறது. பல்வேறு கொலை, வன்முறைச் சம்பவங்கள் நிமித்தமாக நடந்த விசாரணைகள் சிலவற்றில் பிஎஃப்ஐ அமைப்பினரின் ஈடுபாடு இருப்பது உறுதியானது.

கேரளாவில் பேராசிரியர் ஒருவரின் கையைத் துண்டித்த செயல் இதில் முதன்மையாக உள்ளது. அது தவிர பிற மதத்தினரை படுகொலை செய்தல், ஆயுதங்களை கொள்முதல் செய்தல் பதுக்குதல் போன்ற நடவடிக்கைகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சஞ்சித், அபிமன்யு, பிபின், ஷரத், ருத்ரேஷ், ப்ரவீன் பூஜாரி, தமிழகத்தின் வி.ராமலிங்கம், சசி குமார், பிரவீன் நெட்டாரு ஆகியோர் கொலைகளில் பிஎஃப்ஐ தலையீடு உள்ளது. சர்வதேச பயங்கரவாத குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ளனர். இவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே பிஎஃப்ஐ மீது என்ஐஏ சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டது.

அடுத்தடுத்து சோதனை: இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. 32 பேர் கைது செய்யபட்டனர்.

இந்த இரு சோதனைகளை அடுத்து பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள், ரெஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரெஹாப் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட முன்னணிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

கர்நாடக முதல்வர் கருத்து: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இது குறித்து கூறுகையில், “பிஎஃப்ஐ மீதான தடை என்பது நீண்ட காலமாக மக்கள் விரும்பியது. சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் என பல கட்சிகளும் இதனைக் கடந்த காலங்களில் கோரியுள்ளன. பிஎஃப்ஐ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று பயங்கரவாத பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். இந்த அமைப்பைத் தடை செய்வதற்கான காலம் வந்துவிட்டது. இந்திய அரசாங்கம் சரியான முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற தேச விரோதக் குழுக்களுக்கு சரியான செய்தி கடத்தப்பட்டுள்ளது. இனி மக்கள் யாரும் இதுபோன்ற சட்டவிரோத குழுக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் புதிய இந்தியா, இங்கே தேசத்தின் அமைதிக்கு, ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளும், கிரிமினல்களும், அமைப்புகளும், தனிநபர்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பும் பிஎஃப்ஐ-க்கு இந்தியாவில் வேலை இல்லை. மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும்: கேரள மாநிலம் மலப்புரம் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குனில் சுரேஷ் கூறுகையில், “நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும் என்றே கோருகிறோம். பிஎஃப்ஐ தடை என்பது தீர்வல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து அடிப்படைவாதத்தை பரப்புகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுதான். அப்படியென்றால் பிஎஃப்ஐ மட்டும் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?” என்று கூறியுள்ளார்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்ட அறிக்கையில், “மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினைத் தான் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? எந்த ஒரு அமைப்பையும் தடை செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பது ஏற்கெனவே தடைகளை சந்தித்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.

ஒரு கட்சியையோ அமைப்பையோ தடை செய்வதால், அது கொண்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வந்துவிடாது. வேறு ஒரு புதிய பெயரில் புதிய அடையாளத்துடன் அது மீண்டும் முளைத்து வரலாம். அதனால் அவ்விதமான அமைப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவாரங்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. இரண்டு மதவாத சக்திகள் மோதிக் கொண்டால் அவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று வலுப்படுத்திக் கொள்கின்றன. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்தத் தடையால் என்ன நேரும்? – பிஎஃப்ஐ மீது தடை பாய்ந்துள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதன் நிர்வாகிகள் யாரும் போராட்டங்கள், கருத்தரங்கங்கள், கூட்டங்கள் எனவும் எதுவும் நடத்த இயலாது. நன்கொடை வசூலிக்க இயலாது. அடுத்துவரும் நாட்களில் பிஎஃப்ஐ முக்கிய நிர்வாகிகள் சிலர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவுள்ளது. உள்நாட்டு பயணங்களும் கண்காணிக்கப்படும். அதுதவிர பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.