சென்னை: “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை 4-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஒரு சமூக இயக்கம், ஒரு ஜனநாயக இயக்கம். எனவே, அந்த இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான். அது அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட்டதால், இந்த ஆட்டத்தை ஆடுகிறது.
அதேபோல், அக்டோபர் 2-ம் தேதி விசிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தை நான் வரவேற்கிறேன். பொதுவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அழைத்துப் பேசினால், போராட்டத்தில் நானும் பங்கெடுப்பேன். வெவ்வேறு தளத்தில் நாங்கள் பயணித்தாலும், நோக்கம் ஒன்றாக இருப்பதால், பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது” என்று அவர் கூறினார்.