சென்னை; பிஎப்ஐ அமைப்பிற்கு தடை எதிரொலியாக சென்னையில் மாநகர காவல்ஆணையர் சங்கர்ஜிவால் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் யாரும் செல்லாத வகையில் போலீஸ் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான இடங்கள், நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக என்ஐஏ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில், அந்த அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும், இந்திய இறையான்மைக்கு எதிராக செயலாற்றியதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, பி.எப்.ஐ அமைப்பினர் வன்முறையில் இறங்கினர். தமிழ்நாட்டில் கோவை, சேலம், பொள்ளாச்சி, நெல்லை, ராமநாதபுரம் உள்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தினர். குறிப்பாக இந்து அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இந்தநிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகனை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. இதனால், மேலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தவும், வன்முறைகள் எழாதவாறு உஷாராக இருக்கம் மத்திய உள்துறை அமைச்சம் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது
அதைத்தொடர்ந்து, சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையர் தீவிரப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களும் முழு உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.